மதுரை எய்ம்ஸ் - டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு


மதுரை எய்ம்ஸ் - டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு
x

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடர்பான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 2019-ல் ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதுப்பட்டியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1977.80 கோடியில் உலகத் தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதனையடுத்து எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கும் என்று மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் பணி தொடங்கப்படாத நிலையே நீடித்து வந்தது. அதனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி தொடங்குவது எப்போது? என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடமிருந்து நிதி கிடைக்கப்பட்டதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 18-ந்தேதி வரை ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டது.

அதில் 870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை மையம், 30 படுக்கையுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைக்கான அறை, 150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள், செவிலியர்கள் படிக்கக்கூடிய வகுப்பறைகள், மாணவர்களுக்கான தங்கு விடுதிகள், இயக்குனர்களுக்கான தங்கும் இல்லம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகம், ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதை இரு கட்டங்களாக 33 மாதத்தில் முடிப்பதற்கு நிபந்தனை கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story