'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை'
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என்று ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.
ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமையிலான தி.மு.க.வினர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியபடி 95 சதவீதம் முடிவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப்பணியை நாங்கள் சென்று பார்த்தோம். ஆனால் அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை காணவில்லை. எனவே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடங்கள் என்னவானது என்பதை கண்டுபிடித்து தரும்படி கேட்டு கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, நகர செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான கட்சி நிர்வாகிகளும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என புகார் மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தினால் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.