"2028ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க வாய்ப்புள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செந்தில்பாலாஜி உடல் நிலை குறித்து சந்தேகம் வருபவர்கள் மருத்துவமனை சென்று தெரிந்து கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மதுரை,
மதுரையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி கல்லூரி தோப்பூருக்கு மாற்றப்பட உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே ஹோமியோபதி கல்லூரி கட்டப்பட உள்ளது. ஓராண்டுக்குள் இதற்கான பணிகள் தொடங்கும்.
இந்தியாவில் கட்டப்படும் மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசின் நிதிப்பங்கு உள்ளது.ஆனால், மதுரைக்கு இல்லை.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு நிதி வழங்கும் ஜப்பான் நிறுவனத்தின் ஜேஐசிஏ துணை தலைவரை சந்தித்தோம்; இதன் டெண்டர் 2024க்குள் முடித்து, 2028ல் இறுதியாகும் என தெரிவித்தார்.
மத்திய அரசு போதுமான முயற்சி மேற்கொள்ளாவிடில், ஜேஐசிஏ அமைப்பின் மூலம் நிதிபெற்று தமிழ்நாடு அரசே பணிகளை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளோம்.
மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எண்ணத்தில்தான், மதுரை எய்ம்ஸ் கல்லூரியை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடத்தி ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எத்தனை அடைப்புகள் இருந்தன, எது மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என சந்தேகம் வருபவர்கள் மருத்துவமனை சென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.