மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

2028-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்காளம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அதிகப்படியான ரத்த வங்கிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மதுரை அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் ரத்தக் கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் ரூ. 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகம் ரத்த தானம் செய்வதில் முதல் இடத்திற்கு வரும்.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஜெய்கா நிறுவனத்தின் துணைத் தலைவரை இதுதொடர்பாக சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும். 2028-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் போது அப்போதைய தமிழகத்தை ஆண்ட அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யவில்லை. தமிழகத்தில் 8713 சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story