மதுரை தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் பங்கேற்பார்- பிரேமலதா பேச்சு


மதுரை தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் பங்கேற்பார்- பிரேமலதா பேச்சு
x

மதுரையில் விரைவில் நடைபெற இருக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் பங்கேற்பார் என பிரேமலதா கூறினார்.

மதுரை

மதுரையில் விரைவில் நடைபெற இருக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் பங்கேற்பார் என பிரேமலதா கூறினார்.

பொதுக்கூட்டம்

ேத.மு.தி.க. 19-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பாக செல்லூரில் ேநற்று இரவில் பொதுக்கூட்டம் நடந்தது. மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார்.

உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன், மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், கணபதி முன்னிலை வகித்தனர். செல்லூர் பகுதி கழக செயலாளர் தெய்வேந்திரன் வரவேற்றார். நலத்திட்ட உதவிகளை வழங்கி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2005-ம் ஆண்டு மதுரையில் தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்து வருகிறோம். யாரிடமும் இதுவரை காசு வாங்கவில்லை. மதுரையில் வெகு விரைவில் தே.மு.தி.க.வின் மாநாடு நடைபெறும். அதில் விஜயகாந்த் கலந்து கொள்வார். அவர் மக்களுக்காக வாழ்கிறவர்.

இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல் செய்து, மக்களை சுரண்டி பிழைக்கிறார்கள். 40 ஆண்டு காலம் மக்களுக்காக உதவி செய்த விஜயகாந்திற்கு மக்கள் எதுவும் செய்யவில்லை. அவர் மீண்டு வருவார், மீண்டும் வருவார். அவரின் அருமையை இப்போது மக்கள் உணர்கிறார்கள்.

மகளிர் உரிமை திட்டம்

பெண்களுக்கு வழங்கப்படும், மகளிர் உரிமை தொகையானது, தேர்தலுக்கான திட்டம். மகளிருக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும். அதுதான் பெண்களுக்கான உண்மையான ஆட்சி. தி.மு.க. ஆட்சியில் எல்லாவற்றின் விலையும் உயர்ந்து விட்டது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வாய் மூடி மவுனமாக இருக்கிறது.

ஊழல் செய்தவர்களின் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை நடத்துகிறார்கள். இதை வரவேற்கிறேன். தி.மு.க.வில் லஞ்சம், ஊழல் மட்டுமே உள்ளது. அடுத்ததாக அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என்றால் அமைச்சர் துரைமுருகன் வீட்டில்தான் சோதனை நடத்த வேண்டும். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கூட்டணிக்கு ஒரு நாட்டின் பெயரை வைப்பது ஏற்புடையதல்ல. இதனை தேர்தல் கமிஷன் தடை செய்ய வேண்டும்.

அமைச்சர் உதயநிதி

யார் யாரோ சனாதனத்தை பற்றி பேசுகிறார்கள். அமைச்சர் உதயநிதிக்கு சனாதனம் பற்றி தெரியாது. யாரோ எழுதிக் கொடுத்ததை பேசி வருகிறார். யாரும் யாருடைய மதத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அமைச்சர் உதயநிதி இளைஞர், அவர் யோசித்துப் பேச வேண்டும். சனாதனத்தை ஒழிப்பதற்கு பதிலாக தமிழகத்தில் உள்ள லஞ்சம், ஊழலை ஒழிக்க முயற்சி செய்யலாம். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக விஜயகாந்த் வெளியிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில், 23-வது வட்ட செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார். நிர்வாகிகள் அழகர்சாமி, பாண்டியன், பூபதி, அரவிந்தன், பால்பாண்டி, ராமர், தேவராஜ், ஞானசேரன் உள்ளிட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, அவனியாபுரத்தில் 65 அடி கொடிக்கம்பத்தில் பிரேமலதா கட்சிக்கொடியேற்றினார். இதுபோல், அவனியாபுரம் பைபாஸ் ரோடு அருகில் தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தே.மு.தி.க. அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி வைக்கும் திட்டத்தையும் பிரேமலதா தொடங்கி வைத்தார். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.


Next Story