மதுரையில் வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஜூலை 17 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் - மாவட்ட வனத்துறை
மதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகளை ஜூலை 17 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஏராளமான கிளிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் கிளிகள் துன்புறுத்தப்படுதல், தகுந்த உணவுகள் வழங்கப்படாதல், அதன் இறக்கைகள் வெட்டப்படுதல், போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து செல்லூர் பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற ஜூலை 17 ஆம் தேதிக்குள் கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்தை மீறி கிளிகளை வீடுகளில் வளர்க்கும்பட்சத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிளிகளை வீடுகளில் வளர்ப்பதற்காக விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.