மதுரை தீ விபத்து எதிரொலி: ரெயிலில் கியாஸ் சிலிண்டர் கொண்டு வந்த வடமாநில பயணி கைது

மதுரை தீ விபத்து எதிரொலியாக ரெயிலில் கியாஸ் சிலிண்டர் கொண்டு வந்த வடமாநில பயணி கைது செய்யப்பட்டார்.
ரெயில்களில், ரெயில் நிலைய வளாகத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெயில்வே பணிகளுக்கும் கொண்டு செல்வதற்கு தடை உள்ளது.
இந்தநிலையில், மதுரை ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தனி ரெயில் பெட்டியில் சுற்றுலா வந்திருந்த பயணிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து தென்மாவட்டங்களுக்கு வரும் ரெயில்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி ஸ்டேசன் மாஸ்டர் கொடுத்த தகவலின் பேரில், தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட, ஓகா வாராந்திர எக்ஸ்பிரசில் பொதுப்பெட்டியில் பயணம் செய்த பயணி கியாஸ் சிலிண்டர் கொண்டு செல்வது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த பெட்டியில் சோதனை செய்தபோது, ராஜஸ்தான் மாநிலம் பாலியை சேர்ந்த சுர்ஜாராம் (வயது 33), 5 கிலோ கியாஸ் சிலிண்டர் கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.