மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி திடீர் சாவு;உறவினர்கள் போராட்டம்- டாக்டர்கள் மீது புகார்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நோயாளி உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், டாக்டர்கள்தான் இறப்பிற்கு காரணம் என புகார் அளித்தனர்.
இதய நோயாளி
மதுரை நெல்பேட்டை பகுதியை சேர்ந்த 41 வயது நபர், இதயப்பிரச்சினை காரணமாக கடந்த 26-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இதய அறுவை சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான சிகிச்சை முடிந்து விட்டதாகக்கூறி அவரை வீட்டுக்குச் செல்லலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அவருக்கு நேற்று மதியம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சைப்பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரின் உயிரிழப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நேற்று காலையில் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். பிற்பகலில் அவருக்கு டாக்டர்கள் ஊசி ஒன்றை செலுத்திய பின்னர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியாக அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்ததாக கூறினர். அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், அறுவை சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவ மாணவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது என அரசு டாக்டர்கள் மீது குற்றம் சாட்டினர்.
காரணம் என்ன?
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, "இறந்ததாக கூறப்படும் நபருக்கு, முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. குறிப்பாக அவர் வந்த முதல் நாளில் அவருக்கு இதய அறுைவ சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அதற்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இதற்கிடையே அவராக வீட்டிற்கு செல்ல விருப்பப்பட்டு அனுமதி கேட்டார். அதன்பேரில் தான் அவரை டிஸ்சார்ஜ் செய்ய திட்டமிட்டோம். அதற்குள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார். இதில் மருத்துவ ரீதியான தவறு எதுவும் இல்லை.
டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கும் இந்த இறப்புக்கும் சம்பந்தம் இல்லை. டாக்டர்கள், உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை தவிர்த்து மற்ற அறுவை சிகிச்சைகளைதான் புறக்கணித்துள்ளனர். உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் வழக்கம்போல் நடந்து வருகிறது" என்றனர்.