மதுரை: கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு; காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மதுரை மாவட்டத்தின் மேலூர் அருகே கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில், விதிகளை மீறி கிரானைட் எடுத்ததில், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கு 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகளை நடத்துவதற்கான ஏல அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், மேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேக்கிபட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய இடங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க பொது ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிரானைட் குவாரி ஏலம் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரி பொதுமக்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக சேக்கிபட்டி ஊர் மந்தையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என்றும் நீர் வளங்களை அழிக்காதீர்கள் என்றும் பல்லுயிரினங்களை அழிக்காதீர்கள் என்றும் வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி காணப்பட்டனர்.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.