மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் நிரந்தர பயிற்சியாளர் இல்லாமல் தவிக்கும் வீரர்கள்- தமிழக அரசு கவனிக்குமா?


மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில்  நிரந்தர பயிற்சியாளர் இல்லாமல் தவிக்கும் வீரர்கள்- தமிழக அரசு கவனிக்குமா?
x

மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் பயின்று ஆசிய, தேசிய அளவில் சாதனை படைத்த வீரர்கள் நிரந்தர பயிற்சியாளர் இல்லாமல் தவிக்கிறார்கள். தமிழக அரசு, இதனை கவனிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை


மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் பயின்று ஆசிய, தேசிய அளவில் சாதனை படைத்த வீரர்கள் நிரந்தர பயிற்சியாளர் இல்லாமல் தவிக்கிறார்கள். தமிழக அரசு, இதனை கவனிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் விளையாட்டு மைதானம், அரங்கம் உள்ளது. இங்கு தடகளம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், இறகுபந்து, ஜிம்னாஸ்டிக், நீச்சல் என பல்வேறு விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கும் இடம் இருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் அரங்கில் நீச்சல் குளம் உருவாக்கப்பட்டது. அப்போது தனியாக நீச்சல் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பலருக்கு நீச்சல் பயிற்சி அளித்து வந்தனர். அதன் மூலம் தினமும் 40-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வந்தனர். இங்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர் விக்காஸ் ஆசிய போட்டியில் 2 முறை கலந்து கொண்டு பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். அவரை தவிர 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர், வீராங்கனைகள் தேசிய போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனையும் படைத்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் மாநில போட்டிக்கும் பயிற்சி பெற்று பதக்கமும் வென்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்தப்படியாக அதிக நீச்சல் வீரர், வீராங்கனைகளை உருவாக்கி தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு மதுரை நீச்சல் குளம் பெருமை சேர்த்து வருகிறது.

தவிக்கும் மாணவர்கள்

இப்படி பல்வேறு சாதனைகளை படைத்த மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக நிரந்தர நீச்சல் பயிற்சியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. ஆனாலும் மாணவ, மாணவிகள் பயிற்சியில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாவட்ட அக்வாட்டிக் நீச்சல் சங்கம் சார்பில் தனியாக பயிற்சியாளர் நியமித்து பயிற்சி அளித்து வருகிறார்கள். அவர்கள் அளிக்கும் பயிற்சி மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் விக்காஸ் தேசிய நீச்சல் போட்டியிலும், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில நீச்சல் போட்டியிலும் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

மேலும், இங்குள்ள நீச்சல் குளத்தின் மூலம் ஏராளமான மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்தி பயிற்சியும் பெற்று வருகிறார்கள். இந்த வகையில் அரசிற்கு ஆண்டிற்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் தரும் மதுரை நீச்சல் குளத்திற்கு நிரந்தர பயிற்சியாளர் இல்லை என்ற குறை வெகு நாட்களாக உள்ளது.

அரசு கவனிக்குமா?

கடந்த 2 மாதங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீச்சல் குளத்திற்கு பயிற்சியாளர் நியமிக்கபட்ட போதும் மதுரைக்கு பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. எனவே அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி மதுரை மாணவர்கள் இன்னும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்று நீச்சல் பயிலும் வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தேசிய போட்டிக்கு பயிற்சி பெறும் வண்ணம் நீச்சல் குளத்தின் அளவை 50 மீட்டர் அளவாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அது தொடர்பாக அரசு திட்டமதிப்பீடு செய்தும் அளவை உயர்த்த வில்லை. எனவே அதற்கான நடவடிக்கையையும் அரசு எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story