மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்...!


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்...!
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழாவிற்காக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளினார்கள்.

அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலை 11 மணிக்கு தெப்பம் குளத்தை வலம் வந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி தெப்பக்குளத்தை சுற்றி வந்தனர். 2-முறை வலம் வந்த பிறகு சுவாமியும், அம்மனுக்கும் மைய மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு மாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்து இரவு மீண்டும் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். தெப்பத்தை சுவாமி சுற்றி முடிந்த பிறகு மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலும், சுந்தரேசுவரர் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை காண அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தார்கள்.


Next Story