வனத்துறை வாகனத்தை முட்டித்தள்ளிய மக்னா யானை
சேத்துமடையில் வனத்துறை வாகனத்தை முட்டித்தள்ளிய மக்னா யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 6 ஊழியர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பொள்ளாச்சி
சேத்துமடையில் வனத்துறை வாகனத்தை முட்டித்தள்ளிய மக்னா யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 6 ஊழியர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
மக்னா யானை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. அந்த யானையை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி பிடித்து டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். ஆனால் அந்த யானை கடந்த 22-ந்தேதி வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்து சென்று கோவை பேரூர் தேவிசிறை அணைக்கட்டு பகுதியில் உலாவிய யானையை மீண்டும் பிடித்து, வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்தில் வனத்துறையினர் விட்டனர்.
கடந்த 2 மாதங்களாக வால்பாறை பகுதியில் சுற்றித்திரிந்த அந்த யானை, கடந்த சில நாட்களாக டாப்சிலிப், பொள்ளாச்சி வனப்பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் முத்து, சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய கும்கி யானைகளை கொண்டு வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனத்தை தாக்கியது
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு வனத்தை விட்டு வெளியே வந்த மக்னா யானை சேத்துமடை அருகில் இருந்த மாந்தோப்பிற்குள் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். அப்போது அந்த யானை திடீரென வனத்துறை வாகனத்தை முட்டித்தள்ளிவிட்டு சென்றது. இதில் வாகனத்தின் கண்ணாடி நொறுங்கி சேதமடைந்தது. மேலும் வாகனத்தில் இருந்த வனத்துறையினர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் கண்காணிப்பு
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை ஊருக்குள் புகுந்து விடுவதை தடுக்க வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களை சேர்ந்த சுமார் 60 பேர் சேத்துமடை, தம்மம்பதி உள்பட வன எல்லையையொட்டி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் 3 கும்கி யானைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. யானை இருட்டான பகுதியில் இருந்து திடீரென்று வந்து தாக்கியது. இதில் வனத்துறையினர் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருப்பினும் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.