மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா


மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் குஞ்சப்பனை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பொரிச்சாட்டுதல், அக்னி கம்பம் நடுதல், திருவிளக்கு பூஜை வழிபாடு, கற்பக விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், 27 அடி நீளம் மற்றும் 2 அடி அகலம் கொண்ட அக்னி குண்டம் திறந்து பூ வளர்த்தல் ஆகியன நடைபெற்றது.

இந்த நிலையில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன் குதிரை வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக காலை 8:30 மணிக்கு கோவிலுக்கு வந்தார். பின்னர் தலைமை பூசாரி வெள்ளியங்கிரி குண்டத்தை வலம் வந்து பூஜை செய்து மல்லிகை மலர்ச்செண்டை வீசி குண்டத்தில் இறங்கினார். தொடர்ந்து உதவி பூசாரிகள் விக்னேஷ் சக்தி கரகம், கண்ணன் சிவன் கரகம், மகேஷ் கோலக்கூடை எடுத்து குண்டத்தில் இறங்கினர். பின்னர் சிறுவர்-சிறுமிகள் உள்பட பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிலர் குழந்தையை தூக்கிக்கொண்டு குண்டம் இறங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோவில் தலைவர் சென்னியப்பன், செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் அய்யாசாமி கலந்து கொண்டனர். இன்று(வியாழக்கிழமை) அமாவாசை அன்னதான கமிட்டி சார்பில் அன்னதானம், இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா, நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடுதல், அபிஷேக பூஜை, வருகிற 18-ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


Next Story