சிவன்கோவில்களில் நாளை விடிய, விடிய 4 கால பூஜை


சிவன்கோவில்களில் நாளை விடிய, விடிய 4 கால பூஜை
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன்கோவில்களில் நாளை விடிய, விடிய 4 கால அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

சிவகங்கை

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன்கோவில்களில் நாளை விடிய, விடிய 4 கால அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

மகா சிவராத்திரி விழா

மகாசிவராத்திரி விழா என்பது இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றாகும். இந்த நாளில்தான் சிவபெருமான் பார்வதியை மணந்ததாக ஐதீகம் கூறுகிறது. இந்தாண்டு இந்த மகாசிவராத்திரி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய, விடிய 4 கால அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள மருதீசர் என அழைக்கப்படும் சிவபெருமானுக்கு முதல் கால அபிஷேகம் இரவு 8 மணிக்கும், 2-வது கால அபிஷேகம் இரவு 11 மணிக்கும், 3-வது கால அபிஷேகம் அதிகாலை 3 மணிக்கும், 4-வது கால அபிஷேகம் காலை 5.30 மணிக்கும் நடக்கிறது.

வைரவன்பட்டி வயிரவநாத சுவாமி கோவிலில் முதல் கால அபிஷேகம் இரவு 7 மணிக்கும், 2-வது கால அபிஷேகம் 9.30 மணிக்கும், 3-வது கால அபிஷேகம் நள்ளிரவு 12 மணிக்கும், 4-வது கால அபிஷேகம் அதிகாலை 4 மணிக்கும் நடக்கிறது. திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் உள்ள மீனாட்சிசுந்தரேசுவர், தட்சணாமூர்த்தி கோவிலிலும் 4 கால பூஜை நடக்கிறது.

சிவகங்கை-காளையார்கோவில்

திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் முதற்காலம் இரவு 9 மணிக்கும், 2-வது காலம் 11 மணிக்கும், 3-வது காலம் நள்ளிரவு 1 மணிக்கும், 4-வது காலம் அதிகாலை 3 மணிக்கும் நடக்கிறது. அதேபோல் இளையான்குடி ஞானாம்பிகை உடனாகிய ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில், சிவகங்கை விஸ்வநாத சுவாமி உடனாய விசாலாட்சி அம்மன் கோவில், காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில்களில் 4 கால பூஜை நடக்கிறது. சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் 6 கால அபிஷேகங்கள் நடக்கிறது. அதன்படி முதல்காலம் மாலை 6 மணிக்கும், 2-வது காலம் இரவு 8 மணி, 3-வது காலம் இரவு 10 மணி, 4-வது காலம் நள்ளிரவு 1 மணிக்கும், 5-வது காலம் அதிகாலை 4 மணிக்கும், 6-வது காலம் காலை 5.30-க்கும் நடைபெறுகிறது. சிவபுரிபட்டி கிராமத்தில் உள்ள தர்மா வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 2-கால அபிஷேகம் நடக்கிறது.

பால்குட விழா

எஸ்.வி.மங்கலத்தில் உள்ள ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் முதல் கால அபிஷேகம் இரவு 8 மணிக்கும், 2-வது காலம் இரவு 10 மணிக்கும், 3-வது காலம் நள்ளிரவு 12 மணிக்கும், 4-வது கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடைபெறுகிறது. பிரான்மலையில் உள்ள மங்கை பாகர்-தேனம்மை கோவிலில் 3 தளங்களில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு முதல் காலம் இரவு 8 மணிக்கும், 2-வது காலம் இரவு 10 மணிக்கும், 3-வது காலம் நள்ளிரவு 12 மணிக்கும், 4-வது காலம் அதிகாலை 4 மணிக்கும் நடக்கிறது. முன்னதாக பிரான்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் உள்ள வேல் கொண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுக்க உள்ளனர். இந்த பால்குடத்தை குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைக்கிறார். இதேபோல் சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி அருகில் உள்ள மேல்மலைகுன்று பிரத்தியங்கிரா தேவி கோவிலிலும் 4 கால பூஜை நடக்கிறது.


Next Story