மகா சிவராத்திரி வழிபாடு
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு 18-ந் தேதி நடக்கிறது
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. முற்காலத்தில் ஆதிசேஷன் பெற்ற சாபத்தால் இத்தலத்தின் இறைவனை உடல் நலிவுற்று வணங்கிய போது அவர் மகா சிவராத்திரி அன்று முதல் காலத்தில் குடந்தை நாகேஸ்வரரையும், 2-ம் காலத்தில் திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரரையும், 3-ம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், 4-ம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு சாபம் நீங்க பெற்றார் என்பது புராண வரலாறு ஆகும்.
கால சர்ப்ப தோஷம், ராகு கேது புத்தி, களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமண தடை போன்ற தோஷங்களுக்கு சிவராத்திரி அன்று 3-ம் காலத்தில் இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா 18-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள், ஆதிசேஷன் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், தக்கார் பா.முருகன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனா்.