மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 7 Jun 2023 5:07 PM IST (Updated: 7 Jun 2023 5:08 PM IST)
t-max-icont-min-icon

கனபாபுரம் கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே கனபாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த மகாகாளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று காலை கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் ஹோம குண்டம் அமைத்து கலசங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு மகா கணபதி ஹோமம், கோபூஜை, தனபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலையில் அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம், யாக சாலை பிரவேசம், தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து இன்று காலை கோ பூஜை, தம்பதி சங்கல்பம், நாடிசந்தானம், மூலமந்திர ஹோமம், மகாபூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது.

பின்னர் மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்களை வேதமந்திரங்கள் ஓதி யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோவில் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக சென்றனர்.

இதையடுத்து கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றியும், தீபாராதனை காண்பித்து கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

அப்போது கோயிலை சுற்றிலும் கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள மகா காளியம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் கனபாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதிஉலாவும் நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story