மக்காச்சோள பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்து வருகிறது


மக்காச்சோள பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்து வருகிறது
x

விருகல்பட்டி பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர்

விருகல்பட்டி பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மக்காச்சோளம் சாகுபடி

குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்து கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வருகிறது. கோழி பண்ணைகளும் அதிக அளவில் உள்ளன. மக்காச்சோளம் கோழி தீவனமாக பயன்படுவதால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்பகுதிகளில் மானாவாரியாகவும், கிணற்று பாசனம் மூலமாகவும், பி.ஏ.பி. பாசனம் மூலமாகவும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. விருகல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது மக்காச்சோளம், பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் நாசம்

விவசாயிகள் மக்காச்சோள பயிர்களை பாதுகாக்க பழைய துணிகளை வாங்கி பயிர்களை சுற்றிலும் கட்டிவைத்துள்ளனர். இருந்த போதிலும் காட்டுப்பன்றிகள் இரவு நேரம் மட்டும் அல்லாமல் பகல் நேரங்களிலும் மக்காச்சோளம் பயிர்களை நாசம் செய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விருகல்பட்டி பழையூர் பகுதியில் பருத்தி செடிக்கு உரம் வைப்பதற்காக சென்ற பெண் காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்தார்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

இழப்பீட்டு தொகை

வனப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் விருகல்பட்டி பகுதியில் காட்டுப் பன்றிகள் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்து வருகிறது. மக்காச்சோளம் 110 முதல் 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. மக்காச்சோள பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சிறிய அளவிலான தென்னை மரங்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்தன. அதற்கான இழப்பீடு தொகை இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில் தற்போது மக்காச்சோள பயிர்களும் நாசம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் கண்டுகொள்வதில்லை. வருவாய் துறையும், வனத்துறையும் இணைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story