போதிய மழை இல்லாததால் மக்காச்சோளம் பயிர் கருகியது


போதிய மழை இல்லாததால் மக்காச்சோளம் பயிர் கருகியது
x

வெம்பக்கோட்டை பகுதிகளில் போதிய மழையில்லாததால் மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைந்துள்ளது என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை பகுதிகளில் போதிய மழையில்லாததால் மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைந்துள்ளது என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

சோளம் சாகுபடி

வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் முக்கிய சாகுபடியாக உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் 12 ஆயிரம் ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ளனர். தொடக்கத்தில் பருவமழை பெய்ததில் பயிர்கள் நன்றாக வளர்ந்தது.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 3 மாதங்களாக தொடர்ந்து மழை இல்லாததால் முழுமையான விளைச்சலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மக்காச்சோளம் பயிரிட ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், உரமிடுதல் என ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது.

விவசாயிகள் கவலை

இந்தநிலையில் மடத்துப்பட்டி, எட்டக்காபட்டி, சேதுராமலிங்கபுரம், சுப்பிரமணியபுரம், கண்ணக் குடும்பன்பட்டி உள்ள பகுதியில் பயிர்கள் போதிய வளர்ச்சி அடையாத நிலையில் மழை இல்லாததால் முழுமையான விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைய வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து மடத்துப்பட்டி விவசாயி வாசுதேவன் கூறியதாவது:- சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் மழை நன்றாக இருக்கும் என்பதால் மக்காச்சோளத்தை அதிகஅளவில் பயிரிட்டோம்.

பொதுவாக நன்றாக விளைந்தால் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் 20 குவிண்டால் வரை கிடைக்கும். ஆனால் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால் விளைச்சல் 12 குவிண்டால் தான் கிடைக்கிறது.

உரிய நிவாரணம்

ஒரு குவிண்டால் ரூ.2,280-க்கு விற்பனை ஆகிறது. இந்தநிலையில் பயிர்கள் வளர்ந்த நிலையில் எதிர்பார்த்த மழை இல்லாததால் ஏக்கருக்கு 8 குவிண்டால் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் பயிர்கள் நன்கு வளர தொடங்கிய சமயத்தில் காட்டு பன்றிகளால் பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந் தது. இது மூலமும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story