அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் விளைச்சல் பாதிப்பு


பெரம்பலூர் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

மக்காச்சோளம் சாகுபடி

தமிழக அளவில் மக்காச்சோளம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கியது. அப்போது விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு நிவாரண தொகை வழங்கியது. மேலும் 2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கில் உற்பத்தி செய்யப்பட்ட மக்காச்சோளத்திற்கு சரியான விலை கிடைக்கவில்லை. 2020-ம் ஆண்டில் மழை, புயலினால் மக்காச்சோளம் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடந்த ஆண்டும் ஜனவரி மாதத்தில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராகி இருந்த மக்காச்சோள கதிர்கள் தண்ணீரில் மூழ்கி, மீண்டும் முளைக்க தொடங்கின. கடந்த 4 ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கையில் விவசாயிகளால் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 65 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்

தற்போது பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து 90 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. சில விவசாயிகள் சாகுபடி செய்து 60 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இதற்கிடையே, மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுக்கள் தண்டுகளையும், தோகைகளையும், குருத்துகளையும் குறி வைத்து தாக்கின. அப்போது விவசாயிகள் மக்காச்சோள பயிரில் மருந்துகள் அடித்தும், டிரோன் மூலம் மருந்துகளை அடித்தும் படைப்புழுக்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியதால் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது மக்காச்சோளம் கதிர் விளைச்சலாகி அறுவடைக்கு தயாராகி வரும் சூழ்நிலையில் மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்கி வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஏமாற்றமே மிஞ்சியது

குன்னம் தாலுகா பேரளியை சேர்ந்த மாயவேல்:- கடந்த 4 ஆண்டுகளாக மக்காச்சோள பயிரினால் நஷ்டமடைந்த விவசாயிகள் இந்த ஆண்டு லாபம் இருக்கும் என்று நம்பி அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது மக்காச்சோள பயிர்களில் மீண்டும் அமெரிக்கன் படைப்புழு வேகமாக தாக்கி வருவதால், இந்த ஆண்டு அதிகளவு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் ஆண்டுதோறும் மக்காச்சோளம் நடவு பணிக்கு, களை எடுக்கும் பணிக்கும் ஆட்களின் கூலி உயர்ந்து கொண்டே போகிறது.

நிவாரண தொகை வேண்டும்

கூலி உயர்ந்தாலும் வேலைக்கு ஆட்களும் கிடைப்பதில்லை. அப்படி இருந்தும் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தற்போது மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்கி வருகிறது. சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் அமெரிக்கன் படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிரை பார்வையிட்டு, அதற்கான மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். மருந்து விலையும் உயர்ந்து விட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு தமிழக அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு நிவாரண தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளைச்சல் பாதிப்பு

ஆலத்தூர் தாலுகா, தெற்கு மாதவியை சேர்ந்த முத்தமிழ் செல்வன்:- குத்தகைக்கு 4 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளேன். தற்போது மக்காச்சோளத்தில் படைப்புழு அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமற்ற விதை

ஆலத்தூர் தாலுகா, சில்லக்குடியை சேர்ந்த பால்சாமி:- 5 ஏக்கருக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளேன். தற்போது அவற்றில் படைப்புழு தாக்கி வருவதால் செலவு செய்த தொகை கூட கிடைக்குமா? என்று தெரியவில்லை. தரமற்ற தனியார் விதையினால் தான் படைப்புழு தாக்கி வருவதாக விவசாயிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது. விதைகளை நன்கு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். தற்போது மழை பெய்யாததால் மக்காச்சோளத்தில் அதிகமாக படைப்புழு தாக்கி வருகிறது. பயிர் காப்பீடு செய்தாலும், உண்மையான விவசாயிகளுக்கு காப்பீடு இழப்பீடு தொகை கிடைப்பதில்லை. எனவே பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து படைப்புழுவினால் மக்காச்சோளம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

குன்னம் தாலுகா, அத்தியூர் குடிக்காட்டை சேர்ந்த கணேசன்:- 4 ஏக்கருக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளோம். தற்போது படைப்புழு தாக்குதலினால் ஏன் சாகுபடி செய்தோம் என்று மனதுக்கு வேதனையாக இருக்கிறது. படைப்புழு தோகையை தின்று விடுவதோடு, மக்காச்சோள கதிர்களையும் பாதியளவு தின்று விடுகிறது. தட்டைகள் காய்ந்து விட்டன. ஏற்கனவே செலவிடப்பட்ட தொகைக்கு மக்காச்சோளம் விளைச்சல் கிடைக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது. மக்காச்சோள படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து தமிழக அரசின் நிவாரண தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story