2-வது கட்டத்தில் பெரிய ரெயில்நிலையம்: கலங்கரை விளக்கம்-மயிலாப்பூர் சுரங்கப்பணி அடுத்த ஆண்டு முடியும்


2-வது கட்டத்தில் பெரிய ரெயில்நிலையம்: கலங்கரை விளக்கம்-மயிலாப்பூர் சுரங்கப்பணி அடுத்த ஆண்டு முடியும்
x

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தில் இருந்து கச்சேரி சாலை வழியாக மயிலாப்பூர் வரை சுரங்கம் தோண்டி வரும் பிளம்மிங்கோ எந்திரம் அடுத்த ஆண்டு பணியை நிறைவு செய்து மயிலாப்பூரை வந்தடையும் என்று இயக்குனர் அர்ஜூணன் கூறினார்.

சென்னையில் சுமார் 55 கிலோமீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது 2-ம் கட்டமாக 118 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் மெரினா கடற்கரை அருகில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை சுமார் 29.1 கிலோமீட்டர் தூரத்திற்கு 4-வது வழித்தட சேவைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரெயில் இயக்குவதற்காக திட்டமிடப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை இயக்குனர் (திட்டம்) அர்ஜூணன் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் (திட்டம்) அர்ஜூணன் பேசும் போது,

சென்னையில் 2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. இதில் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 3-வது வழித்தடமான மாதவரம்- சிறுசேரி இடையே நடக்கும் பணியில் 8 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி புறவழிச்சாலை வரை நடக்கும் பணியில் 4 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் கலங்கரை விளக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை 10 கிலோமீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் 9 ரெயில்நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இந்தப்பாதையில் முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் தற்போது கலங்கரை விளக்கத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. 700 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த எந்திரம் பூமிக்கு அடியில் 29 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும். முதல் கட்டத்தில் பெரிய ரெயில்நிலையம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையமாகும். 2-ம் கட்டத்தில் ஏற்கனவே இருப்பதையும் விட பெரிய ரெயில்நிலையமாக கலங்கரை விளக்கம் ரெயில்நிலையம் கட்டப்படுகிறது.

குறிப்பாக 416 மீட்டர் நீளம், 35 மீட்டர் அகலத்தில் ரெயில்நிலையம் அமைகிறது. இந்த ரெயில்நிலையம் முனையமாக அமைக்கப்படுவதால் 12 ரெயில்கள் நிறுத்துவதற்கான ரெயில் பாதைகள் தனித்தனியாக அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிமனை பூந்தமல்லியில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ரெயில்நிலையத்தில் மேல் தளத்தில் ரெயில் பாதையும், அதற்கு கீழ் தளத்தில் 3 ஆயிரம் பயணிகள் அமரும் வகையில் இடவசதியும் ஏற்படுத்தப்படுகிறது. கச்சேரி மெட்ரோ ரெயில்நிலையம் அடுக்கு வகையைச்சேர்ந்த சிறிய ரெயில்நிலையமாகும்.

இந்தப்பகுதியில் பாறைகள் அதிகம் காணப்படும் என்பதால் சவால் மிகுந்ததாக இருக்கும். இருந்தாலும் மயிலாப்பூர் வரையிலான பணியை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மயிலாப்பூரில் 4 அடுக்கு கொண்ட ரெயில்நிலையம் அமைய உள்ளது. இந்தப்பணியும் சவாலாக இருக்கும்

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமேலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு இணை-இயக்குனர் கிரிராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


Next Story