பாம்பாற்றில் ஆண் பிணம்

திருப்பத்தூர் அருகே பாம்பாற்றில் ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா சின்ன உடையாமுத்தூர் அருகில் உள்ள பாம்பாற்றில் ஆண் பிணம் மிதப்பதாக சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தண்ணீரில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் விஷமங்கலம் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவர் மகன் மணி (வயது 50) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அடிக்கடி வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வருவது வழக்கம். 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.