முறைகேடு: இ-சேவை மைய ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் - மதுரை கலெக்டர் ஆய்வின்போது சிக்கினர்


முறைகேடு: இ-சேவை மைய ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் - மதுரை கலெக்டர் ஆய்வின்போது சிக்கினர்
x

முறைகேட்டில் ஈடுப்பட்ட அரசு இ-சேவை மைய ஊழியர்கள் 2 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை


முறைகேட்டில் ஈடுப்பட்ட அரசு இ-சேவை மைய ஊழியர்கள் 2 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கலெக்டர் ஆய்வு

மதுரை கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய திட்டங்கள் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தினார்.

அந்த மையத்தில் பணிபுரியும் 2 ஊழியர்கள், எதிரே உள்ள ஜெராக்ஸ் கடைக்காரருடன் இணைந்து முறைகேடாக அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து கலெக்டர், 2 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். மேலும் ஜெராக்ஸ் கடைக்காரர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. பணி நீக்கம் செய்யப்பட்ட 2 ஊழியர்களும் அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் ஆவார்கள்.

முறைகேடாக...

இதுகுறித்து கலெக்டர் அனிஷ்சேகர் கூறியதாவது:-

அரசின் இ-சேவை இணையதளத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் விவரங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய திட்டங்கள் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

அதற்கு கூடுதல் கட்டணம் பெற்று கொள்வதாக தெரிகிறது. இதுபோன்ற புகார்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் அரசு இ-சேவை மையங்களில் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றுகள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ.10-ம், இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்று ரூ.60-ம் அரசால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து அருகிலுள்ள தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள், மகளிர் திட்டங்கள் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படும் இ-சேவை மையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களை மட்டுமே அணுக வேண்டும்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிவர அதிக கட்டணம் பெறும் இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihel pdesk.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 18004251333 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story