மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை பழமை மாறாமல் விரைந்து முடிக்க வேண்டும் - அறநிலையத்துறை இணை ஆணையர்


மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை பழமை மாறாமல் விரைந்து முடிக்க வேண்டும் - அறநிலையத்துறை இணை ஆணையர்
x

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை பழமை மாறாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வு பணியில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு

பாலாலயம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் 63-வது தலமாக உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19, 20, 12 ஆகிய மூன்று தேதிகளில் யாகசாலை பூஜைகளுடன் பாலாலயம் செய்யப்பட்டு, மூலவர் கருவறை மூடப்பட்டு கோவில் கோபுரம் மற்றும் அனைத்து சன்னதிகளும் மூடப்பட்டது.

பிறகு பழமை மாறாமல் வைணவ ஆகம முறைப்படி கோவில் கும்பாபிஷேம் நடத்த முடிவு செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த பணிகளும் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

ஆய்வு

கோவில் கோபுரங்கள் சீரமைக்க சவுக்கு கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி இந்த கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் வகையில் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணி வேலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கோவிலில் பழைய மின் இணைப்புகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், புதிய மின் இணைப்புகளை போர்க்கால அடிப்படையில் அமைத்து, பிறகு முதல் கட்டமாக தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகிய மூலவர் சன்னதிகளை வைணவ ஆகம முறைப்படி பழமை மாறாமல் உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.

பிறகு கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை ஸ்தபதி நந்தகுமாரை அழைத்து தலசயன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், நிலமங்கைதாயார், ஆஞ்சநேயர், பூதத்தாழ்வார், சீதை, ராமர் ஆகிய உற்சவ மூர்த்திகளின் வெண்கல நிலைகள் தற்போது கண்ணாடி அறைகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அதனை பாதுகாப்பாக வைக்கும் வகையில் உற்சவர் சிலைகள் உள்ள அறைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.

விரைவாக முடிக்க

அதேபோல் கோவில் கோபுரங்கள சுதை சிற்ப வேலைகளுடன் வண்ணம் தீட்டி சீரமைக்கும்போது ஏற்கனவே உள்ளது போன்று வைணவ ஆகம விதிகளின்படி சிற்பங்களை சீரமைக்க உத்தரவிட்டார். கும்பாபிஷேம் விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக விரைவாக இந்த பணிகளை முடிக்க கோவில் நிர்வாகத்திற்கு இணை ஆணையர் வான்மதி உத்தரவிட்டார். அப்போது கோவில் அர்ச்சகர்களிடமும் திருப்பணிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தபாரதிதாசன், கோவில் செயல் அலுவலர் சரவணன், கோவில் மேலாளர் சந்தானம், கோவில் அர்ச்சகர்கள் ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன், சக்கரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story