ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் கைது
ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
துறையூர்:
துறையூரில் முசிறி பிரிவு சாலை அருகே உள்ள கத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 67). இவர் மராட்டிய மாநிலத்தில் பொதுப்பணி துறையில் என்ஜினீயராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் மாணிக்கம் தனது சொந்த ஊரான காட்டுப்புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் மர்ம நபர் ஒருவர் மாணிக்கத்தின் வீட்டில் ஏறி குதித்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே தெருவில் வசிக்கும் தினேஷ் என்பவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மேலும் மாணிக்கத்திற்கு தகவல் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக மாணிக்கம் துறையூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் தெற்கியூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார்(வயது 42) என்பதும், இவர் ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.