ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.4 லட்சம் நகை கொள்ளையடித்தவர் கைது
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.4 லட்சம் நகை கொள்ளையடித்தவர் கைது
கோவை
கோவையில் ஓடும் ரெயிலில் ரூ.4 லட்சம் நகையை கொள்ளையடித்த நபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 64). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவியுடன் சென்றார். பின்னர் பாலக்காட்டில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக கடந்த 12-ந் தேதி சென்னையில் இருந்து பாலக்காட்டிற்கு கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது மனைவியுடன் பயணம் செய்தார்.
இந்த ரெயில் திருப்பூர்-கோவை இடையே வந்து கொண்டிருந்த போது ரத்தினசாமி மற்றும் அவரது மனைவி வைத்திருந்த 10 பவுன் பையை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார். இந்த பையில் அவர்கள் தங்க நாணயம், நெக்லஸ், செயின் உள்பட 10 பவுன் நகைகள் வைத்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
கண்காணிப்பு கேமரா
இதையடுத்து ரத்தினசாமி கோவை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. வனிதா உத்தரவின் பேரில், போலீஸ்சூப்பிரண்டு பொன்ராம் மற்றும் துணை சூப்பிரண்டு யாஸ்மின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் நபர் ஒருவர் கைப்பையுடன் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோவை குறிச்சி பிள்ளையார்புரத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (41) என்பதும், ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நகையை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான தனிப்படையினர் ராஜேஷ்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்ட்ட ராஜேஷ்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.