ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்றவர் கைது
ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் சிலர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து மாங்காடு போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் அளித்த தகவல்களின் பேரில் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி, சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப், குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அர்ஸ்கோயல் (23) என்பவர் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரின் செல்போன் சிக்னலை வைத்து உத்தர பிரதேசம் சென்ற தனிப்படை போலீசார் அர்ஸ் கோயலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட வித, விதமான போதை மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்துகளை பறிமுதல் செய்து சென்னை அழைத்து வந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்:-
12-ம் வகுப்பு படித்த அர்ஸ்கோயல் ஆரம்பத்தில் உடற்பயிற்சிக்கு சம்பந்தமான உணவு பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்தால் அதில் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு அதற்கென தனியாக வெப்சைட் ஒன்றை தொடங்கியுள்ளார்.
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதாக கூறி தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை தன்னிடம் கேட்பவர்களுக்கு வாங்கி கூரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கூரியர் மூலம் அனுப்பியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், இருமல் மருந்துகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் இந்த ஆண்டு வரை மட்டும் ரூ.20 லட்சத்துக்கு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அர்ஸ்கோயலை போலீசார் சிறையில் அடைத்தனர்.