பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலியை திருடியவர் கைது
பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலியை திருடியவர் கைது செய்யப்பட்டனர்.
விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த வெற்றிவேல் மனைவி ஷீலா (வயது 53) என்பவர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அப்போது கூட்டம் நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விராலிமலை கடைவீதியில் சந்தேகத்திற்கு விதமாக சுற்றித்திரிந்த தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி லெட்சுமி (48) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஷீலாவின் தங்க சங்கிலியை திருடியதையும், 6 குழந்தைகளிடம் தங்க சங்கிலிகளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் லெட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.