டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடியவர் கைது


டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடியவர் கைது
x

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

டாஸ்மாக் கடை

அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் கிராமத்தில் திருச்சி செல்லும் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக நாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு 10.30 மணியளவில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு நாகராஜன் வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நாகராஜன், இது குறித்து கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதில் 3 நாட்களாக மதுபானம் விற்ற தொகையை, திருட்டு சம்பவம் நடப்பதற்கு முன்தினம் தான் அதிகாரிகள் வாங்கிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வசூல் பணமான சுமார் ரூ.4½ லட்சம் தப்பியது.

தஞ்சாவூரை சேர்ந்தவர்

இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையிலும், போலீஸ் மோப்ப நாய் மலர் உதவியுடனும் சோதனை நடத்தினர். இந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சோதனை செய்தபோது, சுமார் 45 வயதுடைய நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, அத்தியூரை அடுத்த ஆனூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த செல்வம் (வயது 43) என்பவர் திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த கீழப்பழுவூர் போலீசார், அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story