மதுபோதையில் ஓட்டிவந்ததாக பறிமுதல்: போலீஸ் நிலையத்திலேயே இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி கைது


மதுபோதையில் ஓட்டிவந்ததாக பறிமுதல்: போலீஸ் நிலையத்திலேயே இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி கைது
x

மதுபோதையில் ஓட்டி வந்ததாக போலீசார் பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தை போலீஸ் நிலையத்திலேயே புகுந்து திருடியவரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

சென்னை

இருசக்கர வாகனம் பறிமுதல்

சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை போக்குவரத்து போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஹேடோஸ் சாலை சந்திப்பில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனம் ஒன்று தள்ளாடியபடி வந்தது. அதை மடக்கி அதை ஓட்டி வந்த சூளைமேட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருண் என்பவரை தடுத்து நிறுத்தினர். அவரை மதுபோதை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நுங்கம்பாக்கம் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தினர்.

திருடிச்சென்றார்

வாகனம் பறிமுதல் செய்ததால் செய்வதறியாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த அருண், போலீசார் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மற்றொரு சாவியை போட்டு, அவரது இருசக்கர வாகனத்தை போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் பறிமுதல் செய்து வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வாகனத்தின் உரிமையாளரான அருண் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

போலீசார் அவர் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்ததோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story