ஸ்கூட்டரில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
ஸ்கூட்டரில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் சாராயம் மற்றும் மதுபாட்டில் கடத்தலை தடுக்க கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தியும், ரோந்து பணியில் ஈடுபட்டும் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த 120-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி ஸ்கூட்டரில் வந்தவரை போலீசார் வழிமறித்தனர். பின்னர் ஸ்கூட்டரில் இருந்த 3 சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில், அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்கூட்டரில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த சரவணன் (வயது 43) என்பதும், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடலூர் முதுநகருக்கு கடத்தி சென்று, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 300 மதுபாட்டில்கள் (கட்டிங்) மற்றும் 50 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.