இளம் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை


இளம் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை
x

ஆடு, மாடுகள் மேய்க்கும்போது இளம் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரியலூர்

பாலியல் பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை அடுத்த செங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 50). இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வயல் பகுதியில் ஆடு, மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, தன்னுடன் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த 21 வயது பெண்ணை இளங்கோவன் அருகில் உள்ள ஏரி ஓடைக்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் பயந்துபோன அந்த பெண் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். தொடர்ந்து மிரட்டல் விடுத்து பலாத்காரம் செய்ததால் அந்த பெண் திருப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் 3 மாதங்களில் ஊர் திரும்பினார். இதனிடையே அந்த பெண்ணுக்கு 11.07.2019 அன்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் கர்ப்பமடைந்திருந்தை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

வாழ்நாள் சிறை

இதுதொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர், அவரிடம் விசாரித்ததில் தன்னை இளங்கோவன் தான் பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறினார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இளங்கோவனை கைது செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக அரியலூர் மகளிர் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

வழக்கு முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ஆனந்தன், குற்றவாளிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், பலாத்கார குற்றத்திற்காக ரூ.25,000 அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும், 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார்.

சிறையில் அடைத்தனர்

அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து இளங்கோவனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜா ஆஜராகினார். இதனிடையே அந்த பெண்ணுக்கு 7 மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. மேலும் இளங்கோவனுக்கு ஏற்கனவே 2 மனைவிகள், 3 மகள்கள், ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story