மாண்டஸ் புயல்: வண்டலூர் பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்தது - 20 மரங்கள் வேருடன் சாய்ந்தன


மாண்டஸ் புயல்: வண்டலூர் பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்தது - 20 மரங்கள் வேருடன் சாய்ந்தன
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாண்டஸ் புயலால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 20 மரங்கள் வேருடன் சாய்ந்தன.

சென்னை

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளும் அதனுடைய இருப்பிடங்களில் அடைக்கப்பட்டன.

மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதேபோல உயிரியல் பூங்கா குடியிருப்பு பகுதியில் நுழைவாயில் இரும்பு கேட் அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. குடியிருப்பு பகுதியில் இருந்த மிக பழமை வாய்ந்த ராட்சத மரமும் வேருடன் சாய்ந்தது. ஒரு இடத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. வேருடன் சாய்ந்த மரங்களை பூங்கா ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

புயல் காரணமாக பூங்காவில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேரில் வந்து பேட்டரி வாகனம் மூலம் பூங்காவில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.

பின்னர் பூங்காவில் சேதம் அடைந்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாண்டஸ் புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. 7 இடங்களில் பெரிய மரங்களும், பல இடங்களில் சிறிய மரங்களும் புயல் காற்று வீசும் போது வேருடன் சாய்ந்தன. இதனை வெட்டி அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மரம் விழுந்த போது ஒருபகுதியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து உள்ளது. இதனை உடனடியாக கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தற்போது பூங்காவில் வரிக்குதிரை இல்லாமல் உள்ளது. எனவே ஒரு வரிக்குதிரை ஜோடி கொண்டு வருவதற்காகவும், ஏற்கனவே பூங்காவில் ஒரு ஒட்டகச்சிவிங்கி மட்டும் இருக்கிறது. இதற்கு ஜோடியாக இன்னொரு ஒட்டகச்சிவிங்கி கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்கா சிறந்த மேலாண்மையில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தால் சமீபத்தில் இந்தியாவிலேயே முதன்மை உயிரியல் பூங்காவாக தேர்வு செய்யப்பட்டது. உயிரியல் பூங்காவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியராக ஆக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சருடன் பூங்கா இயக்குனர் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story