மானாமதுரையில் மாங்காய் விளைச்சல் அமோகம்


மானாமதுரையில் மாங்காய் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 4:24 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் மாங்கய் விளைச்சல் இருந்தாலும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை பகுதியில் மாங்கய் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் இருந்தாலும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாங்காய் விவசாயம்

சிவகங்கை மாவட்டத்தில் முதல் விவசாயமாக நெல்பயிர் பயிரிட்டு அறுவடை செய்வது வழக்கமாக இருந்த வேளையில் கோடைக்கால பயிராக இங்குள்ள விவசாயிகள் மாங்காய், காய்கறிகள், கடலை உள்ளிட்ட பயிர்களை விளைவித்து அறுவடை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மே முதல் ஜூலை மாதம் வரை மாம்பழம் சீசன் உள்ளதால் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள மாமரத்தில் விளையும் மாங்காய்களை பறித்து அவற்றை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டு மானாமதுரை பகுதியில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிரிட்டிருந்த மாங்காய்கள் அறுவடை காலத்தை எட்டிய நிலையில் தற்போது அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மாங்காய் விளைச்சல் இருந்தாலும் கூட போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விலை இல்லை

இதுகுறித்து மானாமதுரையை சேர்ந்த பெண் விவசாயி ஹேமாதர்ஷினி கூறியதாவது:- மானாமதுரை அருகே உள்ள மாங்குளம் பகுதியில் சுமார் 3½ ஏக்கரில் மாங்காய் விவசாயம் செய்து வருகிறோம். மாம்பழம் சீசன் வரும்போது இந்த மாங்காய்களை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறு அறுவடை செய்யப்படும் மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைத்தும் அதை விற்பனைக்கு கொண்டு செல்வதும் வழக்கம். மேலும் இங்கு கல்லாமை மற்றும் காசா லட்டு, இமான்ஸ் உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த மாம்பழங்களும், ராஜபாளையம் சப்போட்டா ஆகிய பழங்களும் விளைச்சல் செய்து விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.

இந்தாண்டு போதிய மழை பெய்தாலும் கூட மாங்காய் விளைச்சல் அதிகமாகவே இருந்தது. மாம்பழம் சீசன் இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில் தற்போது கிலோ ரூ.30-க்கும் மாங்காய்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

நஷ்டம்

இதுதவிர விளைந்த மாங்காய்களை பறிப்பதற்காக சம்பளத்திற்கு ஆட்கள் கொண்டு வந்து பறிக்க வேண்டிய நிலையில் இந்தாண்டு மாங்காய் விளைச்சல் செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பறித்த மாங்காய்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு வாடகை வண்டிக்கு ஒரு தொகையை செலவிட வேண்டியது உள்ளது. இதன் காரணமாக ஏராளமான விவசாயிகள் விளைந்த மாங்காய்களை அறுவடை செய்யாமல் மரங்களில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் மாங்காய்கள் குருவிகள், அணில்களுக்கு உணவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story