சூழல் சுற்றுலா மையத்தில் மாங்குரோவ் திருவிழா
காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் மாங்குரோவ் திருவிழா நடந்தது.
தொண்டி,
காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் மாங்குரோவ் திருவிழா நடந்தது.
மாங்குரோவ் திருவிழா
திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தில் வனத்துறை மூலம் இயங்கி வரும் சூழலியல் சுற்றுலா மையத்தில் ராமநாதபுரம் வன உயிரின காப்பகம் சார்பில் கடந்த 26-ந் தேதி முதல் மாங்குரோவ் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாங்குரோவ் திருவிழா நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் பகான் சுதாகர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை திருச்சி, மதுரை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பனை ஓலையில் ஆன சிறிய கூடைகளில் மாங்குரோவ் விதைகளை விழாவில் கலந்து கொண்டவர்கள் நட்டனர். தொடர்ந்து காரங்காடு கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வனப்பகுதிக்கு பொதுமக்களை அழைத்து சென்றனர். அங்கு மீன் முள் வடிவ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கால்வாயில் தோண்டப்பட்ட குழிகளில் மாங்குரோவ் செடிகளை விழாவில் கலந்து கொண்டவர்கள் நட்டனர்.
படகு சவாரி
அதன்பின்னர் சூழலியல் மைய படகு தளத்தில் மாங்குரோவ் காடுகளின் முக்கியத்துவம் கடல் வளம் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று மாங்குரோவ் காடுகளையும், விதவிதமான பறவைகளையும் கண்டு ரசித்தனர். அப்போது கடலில் இருந்த மணல் திட்டில் படகில் சென்றவர்கள் இறங்கி நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்பட்டு படகு சவாரி, மதிய உணவு, குளிர்பானம், தொப்பி மாங்குரோவ் காடுகள், கடல் வாழ் உயிரினங்கள் குறித்த கையேடுகள் போன்றவை உயிரின காப்பகம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் உதவி வன பாதுகாவலர் சுரேஷ்குமார், வனவர் நவிந்தன், வனக்காப்பாளர் செல்வராகவன் மற்றும் வன உயிரினங்கள் காப்பக பணியாளர்கள், காரங்காடு சூழலியல் மைய தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.