சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் வெற்றி


சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் வெற்றி
x

பணியாளர் வருங்கால வைப்புநிதி கணக்கு அதிகாரி பணி தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மைய பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அகில இந்திய அளவில் 22-வது இடத்தை பெற்று கோவை மாணவர் சாதனை படைத்திருக்கிறார்.

வருங்கால வைப்புநிதி அதிகாரி பணி

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு செயல்படும், மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மூலம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கும், அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-1, 2, 2ஏ, சப்-இன்ஸ்பெக்டர், உதவி என்ஜினீயர் போன்ற பதவிகளுக்குமான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, இதுவரை 3 ஆயிரத்து 627-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வுக்கு பயிற்சி பெற்று 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் அறிவிக்கப்பட்ட அரசு பணியாளர் வருங்கால வைப்புநிதி அதிகாரி பணிக்கான முதல்நிலை மற்றும் நேர்முகத் தேர்வுக்கும் மனிதநேய பயிற்சி மையம் பயிற்சி அளித்தது.

6 பேர் வெற்றி

இந்த பணிகளில் நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையிலான மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம், சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இலவச பயிற்சி அளித்தது.

அந்த வகையில் நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இவர்களில் கோவையை சேர்ந்த எஸ்.விக்னேஷ்பிரபு என்ற மாணவர் அகில இந்திய அளவில் 22-வது இடத்தை பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

அவரை தவிர, ஆர்.கோகுல் 175-வது இடத்தையும், டபுள்யூ.சுபம்ராஜ் 215-வது இடத்தையும், எஸ்.எச்.புனேஷ் 298-வது இடத்தையும், ஜெ.பாலாஜி 318-வது இடத்தையும், அபினேஷ்குமார் 326-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

தனிப்பட்ட கவனம்

இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனித்திறமை பெற்ற மாணவர்கள் எங்கு படித்திருந்தாலும் அதனை கருத்தில்கொள்ளாமல் தேடிச்சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மனிதநேய அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகின்றது. தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் தேவையை அறிந்து, உதவி தேவைப்படும் மாணவர்கள் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தை அணுகினால் அவர்களுக்கு தேவையான பயிற்சியை தனிப்பட்ட கவனத்துடன் மாணவர்களுக்கு அளிக்கின்றது.

மனிதநேயத்தின் அடிப்படை கோட்பாடுகளான தேவைப்படுவோரின் தேவை அறிந்து தேடிப்போய் உதவி செய்தல் மற்றும் நேர்மையான அதிகாரிகளை உருவாக்குதல் போன்ற விஷயங்களை மனதில்கொண்டு, சமூக மேம்பாட்டுக்கு தேவையான ஒரு நேர்மையான நிர்வாக கட்டமைப்பை மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெறுபவர்கள் உருவாக்குவார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story