முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் கையாடல் முன்னாள் விளையாட்டு அலுவலர் மீதான வழக்கில் திருப்பம்


முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் கையாடல் முன்னாள் விளையாட்டு அலுவலர் மீதான வழக்கில் திருப்பம்
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:45 PM GMT)

முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் கையாடல் நடைபெற்றதாக முன்னாள் விளையாட்டு அலுவலர் மீதான வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலராக பணிபுரிந்தவர் கீதா. தற்போது இவர் வேலூர் மாவட்டத்தில் கோ-கோ மற்றும் கபடி வீரர்களுக்கு பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கையில் பணிபுரிந்த காலத்தில் 2018-2019 ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட அளவில் நடத்திடவும் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற போட்டிகளை இருபாலருக்கும் நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதற்காக ரூ.8 லட்சத்து 70 ஆயிரத்தை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கியது.

இந்த போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வசதியாக மூன்று நாட்கள் பயிற்சி நடத்த வேண்டும் என்றும், அதன் பிறகு மாநில போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்காக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் மூன்று நாட்களுக்கு ரூ.600-ம் அத்துடன் இருப்பிட வசதி அமைத்து கொள்வது உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 400 கொடுக்கப்பட்டதாம். ஆனால் கீதா மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 189 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மூன்று நாட்கள் பயிற்சி முகாம் நடத்தாமல், நடத்தியதாக ஆவணங்களை தயாரித்து அந்த பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கீதா மீது சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கண்ணன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளார்.


Next Story