பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு


பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டி 19 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

மஞ்சுவிரட்டு

பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

19 பேர் காயம்

இதையடுத்து, வெற்றி பெற்ற மாடுகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் மிக்சி, கிரைண்டர், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாடுகள் முட்டி 19 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

மஞ்சுவிரட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர். பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story