சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு
சிராவயலில் இன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சிராவயலில் இன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தகுதிச்சான்று
இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்ட காளைகள் முன் அனுமதி பெற்ற கடிதத்துடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். வாகனத்தில் காளைகள் கொண்டு வருபவர்கள், காளைகளை வாகனத்தில் கொண்டு வருவதற்கான கால்நடை மருத்துவரின் தகுதிச்சான்று மற்றும் மஞ்சுவிரட்டில் கலந்து கொள்வதற்கான தகுதிச்சான்றினை காட்டினால் மட்டுமே சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படும்.
காளைகள் ஏற்றி வரும் வாகனங்களில் 2 பேருக்கு மேல் வரக்கூடாது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்கள் போதைப்பொருட்கள் உட்கொண்டிருக்ககூடாது. சிராவயல் மஞ்சுவிரட்டுக்கு காளைகள் மற்றும் பார்வையாளர்கள் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும்.
வழித்தடங்கள்
சிவகங்கை, மதுரை, மேலூர், சிங்கம்புணரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருமயம் பகுதிகளில் இருந்து காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் உரிய அனுமதி பெற்று திருப்பத்தூர், நான்குரோடு, தம்பிபட்டி, கும்மங்குடி விலக்கு, வைரவன்பட்டி, பிள்ளையார்பட்டி வழியாகவும், காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், அறந்தாங்கி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கோவிலூர், பாதரக்குடி, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, மருதங்குடி வழியாக மஞ்சுவிரட்டு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். அவ்வாறு அனுமதி பெற்று காளைகளுடன் வரும் வாகனங்கள் மஞ்சுவிரட்டு நடைபெறும் மைதானத்தில் பின் பகுதியில் (கிழக்கு) மருத்துவ பரிசோதனைக்கு காளைகளை இறக்கி விட்டு தென் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தவேண்டும்.
கும்மங்குடியிலிருந்து நாச்சியார்புரம் வழியாக மானகிரி செல்லும் சாலையை மஞ்சுவிரட்டு நடைபெறும் தினம் மட்டும் மருத்துவ மற்றும் அவசர உதவிக்கான ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். மற்ற பொது போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது. வாடிவாசலை சுற்றியுள்ள பகுதிகளிலோ மற்றும் அனுமதிக்கப்படாத இடங்களிலோ காளைகளை அவிழ்த்து விடக்கூடாது. எனவே விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
1000 போலீசார்
வாடிவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் சரக போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். எனவே விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.