2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மாபா பாண்டியராஜன் பெற்ற வெற்றி செல்லும் - சென்னை ஐகோர்ட்டு
அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆவடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனும், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மாபா பாண்டியராஜன் வெற்றிப் பெற்றார்.
இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஆவடி நாசர் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், ''மாபா பாண்டியராஜன் ஆளும் கட்சி வேட்பாளர் என்பதால், அவருக்கு அதிகாரிகள் ஆதரவாக செயல்பட்டனர். பண பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் மாபா பாண்டியராஜன் ஈடுபட்டார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் விசாரித்தார். இந்த வழக்கில் மாபா பாண்டியராஜன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் ஆவடி நாசர் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பிறப்பித்தார். அதில், ''ஆவடி நாசர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை.
குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவும் இல்லை. எனவே, முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட ஆவடி நாசர் வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மாபா பாண்டியராஜன் சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றிச் செல்லும்'' என்று நீதிபதி கூறியுள்ளார்.