மாரியம்மன் கோவில் திருவிழா
சங்கராபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாதம் கொடியேற்றப்பட்டு ஆடி மாதம் விழா முடிவடைவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க காலை 11 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜீவா கொளஞ்சியப்பன், வைத்தியநாதன், ஒன்றிய கவுன்சிலர் சரோஜா, வக்கீல் பாலஅண்ணாமலை, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் பச்சமுத்து, சூர்யா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பூவராகவன், கார்த்திகேயன் மற்றும்ஆறுமுகம் முருகன், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி நடைபெற உள்ளது. மேலும் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இந்த விழா ஆகஸ்டு 15-ந்தேதி முடிவடைகிறது.