மாரியம்மன் கோவில் திருப்பணிகள் தொடக்கம்
மேல் கூடலூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் தொடங்கி உள்ளது. பாலாலய சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கூடலூர்
மேல் கூடலூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் தொடங்கி உள்ளது. பாலாலய சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற சந்தைக்கடை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடு உள்பட பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பாலாலய சிறப்பு பூஜை நேற்று மாலை 5 மணிக்கு கோவிலில் நடைபெற்றது.
சிறப்பு பூஜை
விநாயகர், மாரியம்மன், முருகன் உள்பட பல்வேறு தெய்வங்களின் விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்வதற்கான கோவில் கட்டிடங்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜேஷ், ஆய்வாளர் ஹேமலதா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையினர் கூறும் போது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக கோவில் கட்டிடங்களில் பராமரிப்பு பணி நடைபெறும் என்றனர்.