பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா


பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாரியம்மன் கோவில்

பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வெள்ளித்தேர்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான வெள்ளித்தேர் திருவிழா கடந்த 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. கடந்த 1-ந் தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூவோடு எடுத்து வந்தனர்.

கடந்த 5-ந்தேதி காலை 6 மணிக்கு கோவிலுக்கு பக்தர்கள் மா விளக்கு எடுத்து வருதல், காலை 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 8.50 மணிக்கு முதல் நாள் தேர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பை அடைந்தது. பின்னர் 6-ந்தேதி 2-ம் தேர் புறப்பட்டு சத்திரம் வீதியை வந்தடைந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 3-ம் நாள் தேர் புறப்பட்டு, 11 மணிக்கு கோவிலை வந்தடைந்தது.

தெப்பத்தேர் திருவிழா

அதை தொடர்ந்து பாரிவேட்டை நடைபெற்றது. இதையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அம்மன் தெப்பத்தேரில் வீற்றிருந்தார். மேள, தாளத்துடன் அம்மன் தெப்பத்தேரில் 3 முறை சுற்றி வந்தார்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மகாஅபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story