மாரிமுத்து மறைவு பகுத்தறிவு உலகிற்கு பெரிய இழப்பு -கி.வீரமணி அறிக்கை
பெரியார் விருது அளிக்க முடிவு செய்து இருந்தோம் மாரிமுத்து மறைவு பகுத்தறிவு உலகிற்கு பெரிய இழப்பு கி.வீரமணி அறிக்கை.
சென்னை,
நடிகர் மாரிமுத்து மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரபல இயக்குனரும், சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத்தறிவாளருமான நண்பர் தேனி மாரிமுத்து மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது.
'எதிர்நீச்சல்' தொடரில் அவரது நடிப்பு சிறப்பானது. தனது பேட்டிகளில் அவர் 'கடவுள்' நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கையை மிகவும் அம்பலப்படுத்தி வெளிப்படையாகப் பேசியவர். அதன் மூலம் பெரியார் கொள்கையாளர் என்பதை அறிந்தோம். அவருக்குப் 'பெரியார் விருது' அளிப்பதாக நாங்கள் முடிவு செய்து இருந்தோம்.
அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, கலை உலகத்திற்கும், பகுத்தறிவு உலகத்திற்கும் மிகப் பெரிய இழப்பு ஆகும்.
பெரியார் கொள்கை உறவு ஒருவர் மறைந்தார் என்பது அதிர்ச்சி செய்தி.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர் வைரமுத்து மற்றும் கலை உலகப் பகுத்தறிவாளர்களுக்கும் எமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.