உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள்-பா.ஜ.க.வினர் மறியல்


உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள்-பா.ஜ.க.வினர் மறியல்
x
திருப்பூர்


பல்லடம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருச்சி வாலிபர் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள், பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாபாரி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர் பா.ஜ.க. கிளை தலைவராக இருந்து வந்தார். சித்தி புஷ்பவதி (69). செந்தில்குமாரின் மற்றொரு சித்தப்பாவின் மனைவி ரத்தினம்மாள் (58).

இதில் செந்தில்குமாருக்கு தங்கமணி என்ற மனைவியும், தரணிஷ் (11) என்ற மகனும், தாரணிகா (10) என்ற மகளும் உள்ளனர். மோகன்ராஜூக்கு கனகரத்தினம் என்ற மனைவியும், பிரணவ் என்ற மகனும் உள்ளனர்.

இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.

குடிபோதையில் வந்த கும்பல்

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு வீட்டில் செந்தில்குமார் தனியாக இருந்தார். அப்போது திடீரென 3 பேர் குடி போதையில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவா்கள் திடீரென்று செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அவரது தம்பி மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகியோரை அடுத்தடுத்து சரமாரியாக வெட்டி வீசினர். இதில் 4 பேருமே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். கொலையாளிகள் மதுபோதையில் வெறி கொண்டு வெட்டி வீழ்த்தியதால் அந்த இடம் முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன.

இவை அனைத்தும் சிறிது நேரத்தில் நடந்து விட்டது. அந்தப்பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மற்றும் பல்லடம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம்

கொலையான செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்ததால் அதற்காக சரக்கு வேன் வைத்திருந்தார். அந்த வேனின் டிரைவராக நெல்லை மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பவர் இருந்து வந்தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்தினார். இதனால் அவர் மீது வெங்கடேஷ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

அதன் பிறகு செந்தில்குமாரின் வீட்டருகே அமர்ந்து மதுகுடிப்பதை வெங்கடேஷ் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் செந்தில்குமார் அவரை பல முறை எச்சரித்துள்ளார்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில்தான் வெங்கடேசும், அவருடைய நண்பர்களான திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த சின்னசாமி மகன் செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனைமுத்தையா (22) ஆகியோரும் நேற்று முன் தினம் இரவு செந்தில்குமாரின் வீட்டிற்கு செல்லும் வழியில் அமர்ந்து மதுகுடித்து உள்ளனர். இதை பார்த்த செந்தில்குமார் அவர்களை அங்கிருந்து போகுமாறு சத்தம் போட்டார். ஆனால் அவர்கள் அங்கிருந்து போகாமல் செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் மதுபோதையில் இருந்த 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச்செல்லும்போது கொலையாளிகள் மோட்டார்சைக்கிளை விட்டுச்சென்று விட்டனர். அதில் 4 மதுபாட்டில்கள் இருந்தன.

கொலை சம்பவத்தை அடுத்து கோவை மண்டல ஐ.ஜி. பவானி ஈஸ்வரி, கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார்அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், ஈரோடு, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீசார் பல்லடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு போலீஸ் அதிரடிப்படை வாகனம், வஜ்ரா வாகனம் உள்ளிட்ட போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒருவன் சிக்கினான்

இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்லமுத்து குண்டடத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றபோது வாகன சோதனையில் போலீசார் அவனை மடக்கினர். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள வெங்கடேஷ், சோனைமுத்து ஆகிய 2 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து கொலையான 4 பேரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கிராம மக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என்றும் கூறி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது

இதனால் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை மாற்றி வாகனங்கள் செல்ல வழிவகை செய்தனர்.

அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென பல்லடம் நால்ரோட்டிலும் பா.ஜ.க.வினர் சாலை மறியல் செய்தனர். இதனால் பல்லடம் நகரம் முழுவதும் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள், பா.ஜ.க.வினரும் அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் 2 பேரையும் இரவுக்குள் கைது செய்து விடுவோம் என போராட்டக்காரர்களிடம் போலீசார் உறுதி அளித்தனர். எனினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story