சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே சுடுகாட்டுக்கு பாதைகேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே சுடுகாட்டுக்கு பாதைகேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவதி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டிற்கு செல்ல தனியார் பட்டா நிலத்தின் வழியாக தற்போது வரை சென்று வருவதாகவும், அவ்வப்போது விவசாய பணிகளுக்காக பாதையை உழவு செய்து விடுவதால் சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சுடுகாட்டிற்கு செல்ல நிரந்தரபாதை அமைத்து தர வலியுறுத்தி சில்லாம்பட்டி விலக்கு அருகே உள்ள மதுரை- தேனி தேசிய நெடுஞ் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பாண்டி, கண்ணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் சுடுகாட்டிற்கு செல்ல நிரந்தர பாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
சாலை மறியலால் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.