மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு


மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு
x
திருப்பூர்


உடுமலை மாரியம்மன் கோவிலில் நேற்று கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றம் நடக்கிறது.

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

மேலும் கடந்த 4-ந்தேதி சுந்தர விநாயகர் கோவில் கிணற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடப்பட்டது.

இந்த நிலையில் இந்த கம்பத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால், சந்தனம் மற்றும் புனித நீர் உள்ளிட்ட தீர்த்தங்களை ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

இன்று கொடியேற்றம்

மேலும் கம்பங்களில் ஊற்றப்படும் தீர்த்தங்களை பயபக்தியுடன் பாத்திரங்களில் பிடித்து வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. அதனுடன் மதியம் 2 மணிக்கு பூவோடு ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து பூவோடு எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

ரூ.53¾ லட்சத்தில் புதிய தேர்

தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13-ந்தேதியன்று மாலை நடைபெறவுள்ளது. முதல் முதலாக உடுமலை நகரில் உலா வரும் வகையில் ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேக்கு மரம் மற்றும் இலுப்பை மரங்களைப்பயன்படுத்தி 220 மரச்சிற்பங்களுடனும், 120 பொதியல் சிற்பங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளன.

தேர்சக்கரங்களுக்கு வண்ணம்

இந்த தேர் கோவிலுக்கு அருகில் தேர் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேரோட்டத்துக்காக தேரை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

100 ஆண்டுகள் கடந்த பழமையான தேரிலிருந்து எடுக்கப்பட்டு புதிய தேரில் பொருத்தப்பட்டுள்ள தேர்ச்சக்கரங்களுக்கு வண்ணம் தீட்டி அலங்கரிக்கும் பணிகள் நடைபெறுகிறது.

மேலும் தேரில் அமைந்துள்ள சிற்பங்களுக்கு மெருகேற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய வடிவமைப்புடன், புதிய தேர் மாரியம்மன் சூலத்தேவரை சுமந்து கொண்டு உடுமலை நகர வீதிகளில் உலா வரும் காட்சியைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆயிரம் கண்ணுடையாளுக்கு

கண்மலர் சாத்தி வழிபாடு

உடுமலை மாரியம்மன் கோவில் நோன்பு சாட்டியதிலிருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து வழிபாடு மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக ஆயிரம் கண்ணுடையாளுக்கு கண்மலர் வைத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். மனிதர்களின் அவயங்களில் மிக முக்கியமானதும் வாழ்வை ரசிப்பதற்கு உதவியாக இருப்பது கண்கள் தான். அந்த கண்களை பாதுகாப்பது மிக முக்கியமானதாகும்.

அதன்படி மாரியம்மன் சூலத்தேவர் எழுந்தருளி அருள்பாலிக்கும் கருவறையின் பின்புறம் உள்ள சுவரில் பக்தர்கள் சந்தனத்தில் கண்மலரை பதித்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். கண் நோய்களிலிருந்து நிவாரணம் தருவதுடன் தனது கருணைப் பார்வையையும் அன்னை தனது பக்தர்களின் மீது வீசுவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் தினசரி ஏராளமான பக்தர்கள் வெள்ளியால் ஆன கண் மலரை கோவில் சுவரில் பதித்து வழிபட்டு வருகிறார்கள்.


Next Story