புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி, பழங்கள் விற்பனை


புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி, பழங்கள் விற்பனை
x
தினத்தந்தி 30 Sep 2023 7:00 PM GMT (Updated: 30 Sep 2023 7:00 PM GMT)
தர்மபுரி

புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். பின்னர் பல்வேறு காய்கறிகளுடன் சமைக்கப்பட்ட உணவை குடும்பத்துடன் சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்வார்கள். இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறும். அதன்படி தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி காய்கறிகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் உழவு சந்தைக்கு வர தொடங்கினர். மொத்தம் 145 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்கறிகள் வாங்க வந்தனர். நேற்று ஒரே நாளில் இங்கிலீஷ் காய்கறிகள் மற்றும் நாட்டு காய்கறிகள் என மொத்தம் 44 டன் காய்கறிகள், 3 டன் பழங்கள் மொத்தம் ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 475-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தர்மபுரி உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம் முதல் சனிக்கிழமை நாளில் 31 டன் காய்கறிகள் விற்பனையானது. வருகிற சனிக்கிழமை நாட்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story