கவுரவ விரிவுரையாளர்கள் பணிகளுக்கு தகுதி அடிப்படையில் தேர்வு - அமைச்சர் பொன்முடி


கவுரவ விரிவுரையாளர்கள் பணிகளுக்கு தகுதி அடிப்படையில் தேர்வு - அமைச்சர் பொன்முடி
x

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

1,895 கவுரவ விரிவுரையாளர்கள்

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை எவ்வாறு நிரப்புவது? என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு கலைக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் 1,895 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதுபோன்று கடந்த 10 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மூலமாக நியமிக்கப்பட்டனர். இதில் பல்வேறு குளறுபடிகள், தவறுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை களையும் வகையில், தமிழக அளவில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, அதனை எவ்வாறு நடத்த வேண்டும்? என்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

நேர்முகத் தேர்வு

அந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலாளர், துணை செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் பாடங்கள் வாரியாக இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த குழுவில் அந்தந்த பாடம் சார்ந்த வல்லுனர்கள் கேள்வி கேட்கும் வகையில் நியமிக்கப்படுவார்கள். 8 பல்கலைக்கழகங்களில் இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

அதன்படி, வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து வருகிற 4-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை பல்கலைக்கழகங்களில் பாடங்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடக்க இருக்கிறது. தரத்தின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பரிந்துரைக்கு இடமே கிடையாது.

யாருக்கு முன்னுரிமை?

ஆராய்ச்சி படிப்புடன், 'நெட்' அல்லது 'ஸ்லெட்' தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை. குறிப்பிட்ட பாடங்களுக்கு இந்த தகுதியுள்ளவர்கள் கிடைக்கவில்லை என்றால், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களுக்கு அடுத்ததாக முன்னுரிமை கிடைக்கும். ஆராய்ச்சி படிப்பு இல்லாமல், நெட் மற்றும் ஸ்லெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்கு அடுத்த முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த அடிப்படையில் சரியான முறையில் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 1,895 கவுரவ விரிவுரையாளர் பணி இடங்களுக்கு 9 ஆயிரத்து 915 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிலும் தமிழ் பாடத்தில் உள்ள 314 இடங்களுக்கு மட்டும் 2 ஆயிரத்து 734 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். இடஒதுக்கீடு முறை கண்டிப்பாக இதில் பின்பற்றப்படும். இவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் 11 மாதங்களுக்கு வழங்கப்படும். ஏற்கனவே பணியில் உள்ள தகுதியில்லாத கவுரவ விரிவுரையாளர்கள் வரக்கூடிய காலங்களில் மாற்றப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story