மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலாளர் துரை அருணன், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூறுகையில், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் பேக்கிங் செய்யப்படாத, உதிரியாக வாங்குகிற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. அமலாகாது என்ற நிதி மந்திரியின் விளக்கம் ஏற்க கூடியதாக இல்லை. எனவே உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.