மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
கோவையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 528 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 528 பேர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வு
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் வேலையிழப்பு உள்ளிட்டவற்றை கண்டித்தும், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை குறைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கோவை மாநகரில் 4 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் போரட்டம் நடை பெறும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சாலை மறியல்
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னதாக கலெக்டர் அலுவலகம் அருகே இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே ரேஸ்கோர்ஸ் போலீசார் மறியலில் ஈடுபட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 305 பேரை போலீசார் கைது செய்தனர்.
பி.ஆர்.நடராஜன் எம்.பி.
இது போல் இருகூரில் பத்மநாபன் தலைமையிலும், சரவணம்பட்டியில் 2 இடங்களிலும் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. கோவை மாநகரில் மொத்தம் 4 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 179 பெண்கள் உள்பட 528 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமை தாங்கினார்.
இதையடுத்து அவர்கள் கோவை -மேட்டுப்பாளையம் ரோடு எல்.எம்.டபிள்யூ. பிரிவு அருகே உள்ள தபால் நிலையத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ் பெக்டர் தாமோதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.